
திருத்தணி அருகே அரசு பள்ளியில் கழிவறை கட்டுமான பணிகளுக்கு மாணவர்களை வைத்து வேலை வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி கட்டுமான பணிகள், துப்புரவு பணிகள் ஆகியவற்றுக்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களையே பயன்படுத்தும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இதுபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், தற்போது அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருப்பது மாணவர்களின் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியை அடுத்த திருவளங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்காக கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
அதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கொத்தனாருக்கு உதவியாளர்கள் இல்லாத நிலையில், பள்ளி நேரத்தில் அங்கு படிக்கும் மாணவர்களே தண்ணீர் கொண்டு செல்லுதல், சிமெண்ட் கலவை சுமத்தல் போன்ற வேலைகளை பள்ளி தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் செய்து வருகின்றனர்.
படிக்கும் குழந்தைகளை கட்டிட வேலைக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.