
உலகிலேயே மிக உயரமான பாலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சீனாவின் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஒன்றான குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கின் மேல் 625 மீட்டர் (சுமார் 2,051 அடி) உயரத்தில் இந்த அற்புத பாலம் வானுயர எழுந்து நிற்கிறது.
இந்த பிரம்மாண்டமான பாலம் குயிசூ மாகாணத்தின் இரண்டு பக்கங்களுக்கு இடையேயான பயண நேரத்தை முற்றிலும் குறைத்துள்ளது. முன்னர் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்ட ஒரு பயணம், தற்போது இரண்டே நிமிடங்களில் கடக்கப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 28 அன்று, அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய நேரடி ட்ரோன் காட்சிகளில், மேகங்களால் சூழப்பட்ட அதன் நீல நிறத் தாங்கிக் கோபுரங்களுக்கு மத்தியில் வாகனங்கள் இந்தப் பிரமாண்டமான பாலத்தைக் கடந்து செல்வது காண்பிக்கப்பட்டது. பாலத்தின் திறப்பு விழா, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் திட்டப் பொறியாளர்கள் மத்தியில் மிகுந்த பெருமையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
625 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் உலகிலேயே மிக உயரமான பாலம் ஆகும். மலைப் பகுதியில் கட்டப்பட்ட மிகப்பெரிய இடைவெளி கொண்ட பாலம் (Largest-span bridge in a mountainous area) என்ற பெருமையையும் இந்தப் பாலம் பெற்றுள்ளது.
மொத்தம் 2,900 மீட்டர் நீளமும், பிரதான இடைவெளி 1,420 மீட்டரும் கொண்ட இந்தப் பாலம், வெறும் போக்குவரத்துக் கட்டமைப்பாக மட்டுமன்றி, ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாறியுள்ளது. இதில் 207 மீட்டர் உயரமுள்ள சுற்றுலாக் காட்சிக் கூண்டு (Sightseeing Elevator), ஸ்கை கஃபேக்கள் மற்றும் பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சிகளைக் காணும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குயிசூ (Guizhou) போக்குவரத்து முதலீட்டுக் குழுமத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஊ ஜாவோமிங் கூறுகையில், பெரிய அளவில் கான்கிரீட்டை பயன்படுத்தி பாலம் அமைக்கும்போது, வெப்பநிலையை நிர்வகித்தல், செங்குத்தான பள்ளத்தாக்குச் சரிவுகளை நிலைப்படுத்துதல் மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தைத் தணித்தல் போன்ற பல சவால்களைச் சந்தித்ததாகத் தெரிவித்தார்.
இருப்பினும், அனைத்துச் சவால்களையும் மீறி, திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே குழுவினர் இத்திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
உலகின் முதல் பத்து மிக உயரமான பாலங்களில் எட்டு பாலங்கள் ஏற்கெனவே குயிசூ மாகாணத்தில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.