
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.
கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் அமைச்சர்கள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
"கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி தருகிறது. கூட்ட நெரிசல் பாதிப்புகளுக்காக யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை" என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சந்தித்தேன். அவங்க பேசுறதைக் கேட்டாலே, என்னால பேசக் கூட முடியல. ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஏழைகள். இனி இதுபோல சம்பவம் நடக்கக் கூடாது." என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்த அவர், "பிரதமர் மோடி கரூர் இறப்புகள் பற்றித் தெரிந்ததும் சமூக ஊடகத்தின் மூலம் இரங்கல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்தார். அந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்துசேரும்" என்று குறிப்பிட்டார்.
"அவர் கரூருக்கு நேரில் வந்து பார்க்க விரும்பினாலும், வர இயலாத சூழ்நிலை காரணமாக எங்களைப் பார்வையிட அறிவுறுத்தினார்" என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.