
திருச்சி
பணியின்போது பிடித்தம் செய்யபட்ட ரூ.6 கோடி வருங்கால வைப்பு நிதியை பத்து வருடங்களாக வழங்காமல் இருப்பதால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் மில் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கச் செயலாளர் ஓ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரில் இயங்கி வந்த தனியார் மில் மூடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த மில்லில் வேலை செய்த 822 தொழிலாளர்களிடம் இருந்து நிர்வாகம் பிடித்தம் செய்த ரூ.6 கோடியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
அதன்படி, இந்த பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்து வருடங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்த ஒரு பணப்பலனும் கிடைக்காமல் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.