
ஏற்கனவே இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையால் குடிகாரர்கள் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதால் பெண்கள் தனியாக நடந்து போக முடியவில்லை இதில் புதிய சாராயக் கடையா? என்று ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா வேலந்தாங்கல் கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை அமைப்பதற்கான முயற்சியை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதனை அந்த கிராம மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இருந்தாலும் டாஸ்மாக் சாராயக் கடையை அமைத்தே தீருவோம் என்று விடாபிடியாய் அதிகாரியக்ள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வேலந்தாங்கல் ஆண்கள் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அங்குள்ள அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்த தகவலறிந்ததும் விழுப்புரம் தாலுகா காவலாளர்கள் விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறியது: “எங்கள் கிராமத்தில் ஏற்கனவே சாராயம் மற்றும் சாராய பாட்டில்கள் விற்பனை நடைபெறுகிறது. இதனால் குடிகாரர்கள் போதை தலைக்கேறியதும் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் பள்ளி - கல்லூரி மாணவிகள் சாலையில் தனியாக நடந்து செல்ல முடியாமல் மிகவும் அச்சப்படுகின்றனர்.
மேலும், இளைஞர்கள் குடிபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆகவே டாஸ்மாக் சாராயக் கடை திறக்க இருக்கும் முடிவை கைவிட வேண்டும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்த காவலாளர்கள், “இதுகுறித்து ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.