
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த அரசு பேருந்து அங்கிருந்த வேகத்தடையின் மீது வேகமாக மோதியதில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பெரம்பளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். இவர் தன் மருத்துவ உதவிக்காக குடும்பத்துடன் TNSTC பேருந்தில் சென்னை கோயம்பேட்டிற்கு இன்று காலை வந்தார்.
இவர் வந்த பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த வேகத்தடையின் மீது வேகமாக மோதியது. அப்போது பேருந்தில் உட்கார்ந்திருந்த சுமதி, பேருந்தின் உள்ளேயே நிலைதடுமாறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு பின்னர், சுமதியை தூக்கினர். ஆனால், பேருந்து வேகமாக மோதியதில் சுமதி பேருந்தின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனிருந்த அவரது குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தனர்.
இந்த மோதலால் சகபயணியான கந்தன் என்பவருக்கும் லேசாசான காயம் ஏற்பட்டது.
பின்னர், இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள், பேருந்தை ஓட்டிவந்த அரசு பேருந்து ஓட்டுநரான ஜெயராமனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன சுமதியின் உடல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது.