
சிவகங்கை
காவல் துறைக்குச் சொந்தமான இடங்களில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை இரண்டு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று காவல்துறை ஆலோசனைக் கூட்டத்த்டில் முடிவு எடுக்கப்பட்டது.
காவல்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர்கள் உதயகுமார், லூயிஸ், காமேஸ்வரன் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தணிக்கைவேல், தனிப்பிரிவு ஆய்வாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் முகாம் அலுவலகங்கள், காவலர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் காவல் துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை இரண்டு வாரத்திற்குள் அகற்றுவது,
சிவகங்கை சி.பி.சி.ஐ.டி. அலுவலக பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது,
அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள கட்டிட சுற்றுச்சுவர் பகுதியில் இருந்து 10 மீட்டர் சுற்றளவில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது,
தனி நபர்களுக்கிடையே ஏற்பட்ட இடப்பிரச்சினை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது என்பதால் அதுபோன்ற இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை மாவட்ட நிர்வாகம் அகற்றும் போது காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிப்பது,
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் போது காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு அளிப்பது.
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவது” என்று பல்வேரு முடிவுகள் எடுக்கப்பட்டது.