முதல்வரே காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்வாரா? இறங்கி அடிக்கும் ராமதாஸ்..!

By vinoth kumar  |  First Published Apr 9, 2024, 3:20 PM IST

தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக குரல் கொடுப்பதாக மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்கிறாரா?


மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பயனற்றது என்று உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கணக்கெடுப்பை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது. சமூகநீதியை வலுப்படுத்த பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பயனற்றது என்று உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கணக்கெடுப்பை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்; இது முழுமையான மோசடி ஆகும்.

Tap to resize

Latest Videos

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கோ, ஆட்சி அமைக்கவோ வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், வாக்குறுதி அளிப்பதிலும் நீதி, நியாயம் இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அது கூட இல்லை என்பதைத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த வாக்குறுதி வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. உண்மையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1881 முதல் 1931 வரை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கணக்கெடுப்புடன் சாதி குறித்த விவரங்களையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களின் கோரிக்கை ஆகும். இந்தக் கணக்கெடுப்பு தான் சட்டப்பூர்வமானதாகவும், அனைத்துத் தரப்பினராலும் ஏற்கத்தக்கதாகவும் இருக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாத புள்ளிவிவரங்களைத் திரட்டும் நடைமுறை ஆகும். இந்த முறையில் திரட்டப்படும் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதே சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டு தோல்வியடைந்த ஒன்றாகும்.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இதுதொடர்பாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140க்கும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளுடன் கூடிய கோரிக்கை மனுவை 24.10.2008 அன்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் பா.ம.க.வைச் சேர்ந்த அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அளித்தார். அதை பரிசீலிக்க சிவராஜ் பாட்டீல் ஒப்புக்கொண்ட நிலையில், மக்களவையிலும் இந்தக் கோரிக்கையை பா.ம.க. எழுப்பியது. இந்தக் கோரிக்கைக்கு சமூகநீதியில் அக்கறை கொண்ட முலாயம்சிங், லாலு, சரத்யாதவ் ஆகியோர் ஆதரவளித்தனர்.

அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. ஆனாலும் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்த சதியால் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தப்படாமல் வழக்கமான கணக்கெடுப்பாக நடத்தப்பட்டது. சாதி விவரங்களைத் திரட்டுவதற்காக சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டது. அப்போதே அம்முடிவுக்கு நான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கணக்கெடுப்பால் எந்த பயனும் ஏற்படவில்லை.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால், தலைமைப் பதிவாளர் மூலம் நடத்தப்படுவதாகும். ஆனால், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கிராமப்புறங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாகவும், நகர்ப்புறங்களில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலமாகவும் நடத்தப்படுவதாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் நிலையில், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு உதிரி பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படுவதாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு 1948 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி நடத்தப்படும் நிலையில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு அந்த சட்டத்தின்படி நடத்தப்படுவதில்லை; புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கான சட்டத்தின் மூலமே தரவுகள் திரட்டப்படுகின்றன.

இத்தகைய குளறுபடிகள் காரணமாகத்தான் 2011-13 காலத்தில் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. 1931 ஆம் ஆண்டில் கடைசியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நாடு முழுவதும் 4147 சாதிகள் மட்டுமே இருப்பதாக தெரியவந்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டு சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் 46 லட்சத்திற்கும் கூடுதலான சாதிகள் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்தே சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு எந்த அளவுக்கு மோசடியானது என்பது தெளிவாகும். இதே காரணத்தினால் தான் இந்தக் கணக்கெடுப்பை பயனற்ற ஒன்று என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, அதன் விவரங்களை வெளியிட மறுத்து விட்டது. இத்தகைய பயனற்ற, குழப்பமான கணக்கெடுப்பைத் தான் நடத்தப்போவதாக வாக்குறுதி அளித்து இந்திய மக்களை குறிப்பாக தமிழக மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சி முயல்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக குரல் கொடுப்பதாக மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான சட்டத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அதை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின், அத்தகைய கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்றும் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். 1948 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் திமுகவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு. ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிராக மாநில அரசுகளால் நடத்தப்படுவதை விட பலவீனமான சமூக பொருளாதார சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியையே சமூகநீதிக் கொள்கைகளை ஏற்கவைத்து விட்டதாக பெருமிதம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இப்போது காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்வாரா? அல்லது 1948 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைத்து தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்காவிட்டால் கூட்டணியை முறிப்போம் என்று கூறி தங்களுக்கு முதுகெலும்பு இருப்பதை உறுதி செய்வாரா? என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது மிகவும் எளிதானது. கணக்கெடுப்பு விவரங்களுக்கான பிரிவுகளில் சாதி என்ற ஒன்றை கூடுதலாக சேர்க்க வேண்டும்; கணக்கெடுப்பின் விவரங்களை பொது வெளியில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தங்களை மட்டும் 1948 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தில் செய்தால் போதுமானது. தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் வலிமையாக அமரும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்தத் திருத்தங்களைச் செய்து 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!