Palani : பழனி தைப்பூசத்துக்கு அனுமதி கிடைக்குமா..? ஏக்கத்தில் பக்தர்கள்.. கோவில் நிர்வாகம் சொல்வது என்ன..?

By Raghupati R  |  First Published Dec 28, 2021, 12:03 PM IST

கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் பழனியில் தைப்பூசத்துக்கு அனுமதி கிடைக்குமா ? என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்து இருக்கிறது.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுப்பார்கள். குறிப்பாக தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி, மதுரை, காரைக்குடி, சேலம், திருப்பூர், திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர். 

Tap to resize

Latest Videos

undefined

அதேபோல் புத்தாண்டு, பொங்கல் ஆகிய நாட்களையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். அவ்வாறு பாதயாத்திரை பக்தர்களுக்காக திண்டுக்கல்-ஆயக்குடி, அலங்கியம்-பழனி இடையே தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பழனிமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். 

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தைப்பூச திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்தது. குறிப்பாக முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து கோவிலுக்கு பக்தர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருகின்றனர். 

அதேபோல் தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பழனி கிரிவீதியிலும், நகர் பகுதியிலும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்கிரான் தொற்று எதிரொலியால், ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரும் தைப்பூசத்துக்கு பக்தர்களுக்கு விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், பழனி தைப்பூச திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவுக்கு வருகிற 12-ந்தேதி காலை 6.45 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து 17-ந்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு வெள்ளிரதமும் நடைபெறுகிறது. மேலும் 18 -ந்தேதி தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.45 மணிக்கு திருத்தேரோட்டம், 24-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேரும் நடக்கிறது.

எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை கழுவ கிருமி நாசினி, முககவசம் வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே பழனிக்கு வரும் பக்தர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றுமாறு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

click me!