சோதனையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சோதனையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சுருக்கம்

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கிய வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள முன்னோடி வங்கி முன்பு மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.

இந்த போராட்டத்திற்கு கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் மனோகரன் தலைமைத் தாங்கினார்.

பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்பிரமணியம் போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

அவர் பேசியதாவது, “கடந்த நவம்பர் மாதம் 8–ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். அதுமுதல் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் நீண்ட நேரம் நெடும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்தை அதிக அளவில் கேட்கும் போது மத்திய அரசின் உத்தரவினால் எங்களால் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க முடியவில்லை.

இதனால் சில சமயங்களில் பொதுமக்களுக்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவாகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சில இடங்களில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பபு அளிக்க வேண்டும்.

கடந்த நவம்பர் 8–ஆம் தேதி முதல் இதுநாள் வரை வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 160–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் மற்றும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தற்போதுள்ள இறுக்கமான சூழ்நிலையை போக்க வங்கிகளுக்கு போதிய அளவு பணம் வழங்க வேண்டும். வங்கிகளுக்கு பணம் தருவதில் வெளிப்படைத் தன்மை வேண்டும்.

பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் சிக்குகின்றன. அவர்களுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்த வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

எனவே, பணத் தட்டுப்பாட்டை மத்திய அரசு போக்காமல் வங்கி தொழிற்சங்கங்களுடன் உள்ள மோதல் போக்கை கைவிட வேண்டும். இதே நிலை நீடித்தால் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் தொடர்ந்து போராடும்” என்று அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில், கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் சசீதரன், வங்கி ஊழியர்கள் சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

PREV
click me!

Recommended Stories

ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!
கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நபர்கள்.. மாணிக்கம் தாகூரை மறைமுகமாக விளாசிய ஸ்டாலின்!