
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தபடி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாநில மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைப்பெற்றது.
முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ் அகமது தொடங்கி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு, மாநாடு நடைபெற்ற இடத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
இந்த மாநாட்டிற்கு மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பழனியாண்டி தலைமைத் தாங்கினார். மாவட்ட பொருளாளர் கொளஞ்சிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் சட்டத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் சிம்மச்சந்திரன், மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.
மாநாட்டில், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஆறுமுகம், மாவட்ட ஆலோசகர் கோவிந்தராஜ் பிள்ளை மற்றும் மகளிர் அணியினர், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
“மாற்றுத் திறனாளிகளின் நிலையை அறிய, தமிழக அரசு உடனடியாக மாநில ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும்”,
“மாற்றுத் திறனாளிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்”,
“மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்”,
“மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற நிபந்தனைகளை தளர்த்தி 40 சதவீதத்திலிருந்து அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கிட வேண்டும்” போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.