
தேனி
பைசன்வாலியில் குட்டியுடன் ஊருக்குள் காட்டுயானைகள் அழையா விருந்தாளியாக நுழைந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தலை தெறிக்க ஓடியதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மூணாறை அடுத்துள்ள பைசன்வாலி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டவை முட்டுக்காடு, கொங்கினிசிட்டி, சொசைட்டிமேடு பகுதிகள்.
இங்கு கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளையும் சேதப்படுத்துவதும், வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டுவதும் வழக்கமாகி வருகிறது. இருந்தும் காட்டு யானைகளின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பைசன்வாலி 300 ஏக்கர் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வந்துக் கொண்டிருந்தன. இதனைக் கண்ட மக்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சத்தம் எழுப்பி காட்டு யானைகளை விரட்டினர். அப்போது மிரண்டு அருகில் இருந்த தோட்டங்களுக்குள் ஓடிய யானைகள் அங்கு கிடந்த வாழை, ஏலக்காய் உள்ளிட்டப் பயிர்களை சேதப்படுத்தின.
அந்த இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் முகாமிட்டிருந்த அவை, பின்னர் தானாக காட்டுப் பகுதிக்குள் சென்றன. தொடர்ந்து காட்டுயானைகள் ஊருக்குள் அழையா விருந்தாளியாக நுழைவதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, “காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், விவசாயத் தோட்டங்களுக்குள்ளும் புகாமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.