
தஞ்சாவூர்
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கச்சா எண்ணெய் எடுக்கும் பணியால் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து கதிராமங்கலத்தில் காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள், இளைஞர்கள், மாணவ மாணவிகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டிருந்த காவலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், “கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்,
கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தி கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த கடையடைப்பு போராட்டம் நேற்று முன்தினம் திரும்பப் பெறப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன.
இதனிடையே கதிராமங்கலம் ஐயனார்கோவில் வளாகத்தில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக நடந்த இந்த போராட்டத்தில் கிராம மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இதில் மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தேசிய தலைவர் மார்க், திருப்பனந்தாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாநில பொறுப்பாளர் தமிழினி மற்றும் பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் நேரில் சென்று சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தேசியத் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“கடந்த மாதம் (ஜூன்) 30-ஆம் தேதி முதல் கதிராமங்கலத்தில் நடந்த சம்பவங்களை ஒரு அறிக்கையாக தயார் செய்து மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்க இருக்கிறேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வேன்” என்று அவர் கூறினார்
கியாஸ் அடுப்பு வேண்டாம் என்றும் விறகு அடுப்பே போதும் என்றும் கூறி போராட்டத்தில் விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர் மக்கள்.