
SIR-ஐ எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய ஸ்டாலின், ‘’நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி SIR பணிகள் தொடங்கி விட்டன. மக்கள் பலருக்கு SIR குறித்து முழுமையாக தெரியவில்லை. சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் போதுமான கால அவகாசம் வழங்காமல் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இதை அவசரம் அவசரமாக செய்வது சரியாக இருக்காது.
தேர்தல் ஆனையத்துடன் கூட்டு சேர்ந்து பாஜக எப்படியெல்லாம் மோசடி செய்துள்ளது என்பதை அருமை சகோதரர் ராகுல் காந்தி விளக்கியுள்ளார். முதல்வர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் SIR-ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். நாமும் SIR-ஐ தீவிரமாக எதிர்க்கிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
SIR-க்காக தேர்தல் ஆணையம் கொடுக்கும் வாக்காளர் படிவத்தில் முதலில் நமது விவரங்களை கேட்கிறார்கள். முந்தைய வாக்காளர் திருத்த பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டுள்ளது. உறவினர் என்றால் யாரு? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவரா? மனைவியா? பிள்ளைகளா? எல்லோரும் வாக்காளர் பட்டியலில் தானே இருக்கிறார்கள். இதில் எவ்வளவு குழப்பம் இருக்கு.
தலைசுற்றி விடும்
உறவினர் பெயரில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா? இல்லை உறவினர் பெயரா? சின்ன தப்பு இருந்தால் கூட தேர்தல் ஆனையம் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கும் ஆபத்து இருக்கும். நினைத்து பார்க்கவே அச்சமா இருக்கு. நல்லா படிச்சு பெரும் பொறுப்புகளில் இருப்பவர்களை கூட இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் அவர்களுக்கு தலைசுற்றி விடும். இந்த படிவத்தில் வாக்காளர் புகைப்படத்தை அச்சிட்டு தற்போதைய படத்தை ஒட்டவும் என்று சொல்லப்பட்டுள்ளது.
முதல் கோணல் முற்றிலும் கோணல்
ஆனால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒட்டலாம் என்று மாநில தேர்தல் அதிகாரி சொல்லியிருக்கிறார். இதிலும் இடியாப்ப சிக்கல். ஒருவேளை போட்டோ ஒட்டவில்லை என்றால் என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுமா? பறிக்கப்படாதா? தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி கையில் தான் இந்த முடிவு இருக்கு. இவர்கள் எல்லோரும் ஒரே முடிவு எடுப்பாங்கனு சொல்ல முடியாது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக அனைத்திலும் குழப்பம் தான்.
எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம்
எதிர்க்கட்சியில் இருக்கும் சில அரசியல் மோதாவிகள் SIR பணியை பார்ப்பதே மாநில அரசு ஊழியர்கள் தான். பிறகு ஏன் திமுக பயப்படுகிறது என்று கேட்டுள்ளனர். ஒரு மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணைய பணியில் ஈடுபட்டால் அவர் தேர்தல் ஆனைய கட்டுப்பாட்டில் தான் வருவார். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர மாட்டார். தவறான தகவலை பரப்பக் கூடாது. எதாவது பொய்யை சொல்லி ஏழைகளின் வாக்குரிமையை நீக்கி விடலாம் என எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.
அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்
தேர்தல் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை என்று நமது கழகத்தினர் புகார் கூறுகின்றனர். இத்தனை லட்சணத்தில் ஒரு தொகுதியின் இஆர்ஓ 3 லட்சம் கணக்கீட்டு படிவங்களை இந்த குறுகிய காலத்தில் வழங்கி எப்படி பெறுவார்கள்? வாங்கினால் மட்டும் போதுமா? அதை கணினியமாக்கி டிசம்பர் 7ம் தேதி வரைவு வாக்களர் பட்டியலை வெளியிட வேண்டும்? இதை எப்படி செய்து முடிக்க போகிறார்கள்? அதிக அளவு வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
திமுக அமைத்துள்ள உதவி மையம்
பிஎல்ஓக்கள் தங்கள் பணியை சரிவர செய்யவில்லை என்றால் மொத்த SIR பணிகளும் பாதிக்கப்படும். உங்கள் பகுதியில் உள்ள பி எல் ஓவிடம் படிவத்தை வாங்கி அதை சரியாக நிரப்பி ஒப்படைத்து ஒப்புகை சீட்டு வாங்க வேண்டும். அப்போது தான் உங்கள் வாக்குகள் பாதுகாக்கப்படும். தமிழ்நட்டில் SIR பாதிப்பை சரி செய்ய திமுக சார்பில் உதவி மையம் அமைத்துள்ளோம். SIR ஆல் பாதிக்கப்படும் அனைத்து மக்களும் திமுக அமைத்துள்ள 80654 20020 உதவி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். SIR சதி வலையில் சிக்காமல் நமது வாக்குரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.