
நாமக்கல்
தமிழகத்திற்கு இன்னும் கவர்னர் நியமிக்கப்படாதது ஏன்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பினார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நாமக்கல் வந்திருந்தார். அப்போது, அவர், செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகாவின் நிலைப்பாடு குறித்து நாளை (அதாவது இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனையில் தேர்தல் ஆணையம் விதிகளின்படி செயல்பட்டு முடிவை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சி நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை டெல்லியில் நமது விவசாயிகள் பலவித போராட்டங்கள் மூலம் பிரதிபலித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது, வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் மழை பொய்த்து விட்டதால், கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால் வறட்சி நிவாரணம் முழுமையாக கொடுக்க முடியாத சூழல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு கூட இன்னும் முடியவில்லை. வறட்சியை கருத்தில் கொண்டு விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். புதிய பயிர்கடன் வழங்க வேண்டும். வறட்சியால் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
சென்னை துறைமுகத்தில் கன்டெய்னரில் கள்ள ரூபாய் நோட்டு எடுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் திருப்பூரில் கன்டெய்னர் லாரிகளில் பணம் பிடிபட்டது குறித்து இதுவரை உண்மை நிலை தெரியவில்லை. இதனால் கன்டெய்னர் பணம் என்றாலே மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது, இதனை கவனத்தில் கொண்டு சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்த விவரத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
நாமக்கல் – திருச்செங்கோடு சாலை விரிவாக்க பணி முடிக்கப்படாததால் போக்குவரத்துக்கு இடையூறு இருந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
த.மா.கா. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை மேலும் வலிமைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்த வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுகவின் மூன்று பிரிவுகளில் இருபிரிவினர் விசாரணை வேண்டும் என கேட்டு வருகின்றனர். இதனால் சந்தேகம் வலுத்து வருகிறது. இதனை தீர்க்கக்கூடிய கடமை ஆளும் கட்சிக்கு உள்ளது.
தமிழகத்திற்கு இன்னும் கவர்னர் ஏன் நியமிக்கப்படவில்லை? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது” என்று அவர் பேட்டியளித்தார்.
அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.
அப்போது அவர், “சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எனக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை, சால்வை அணிவிக்க வேண்டாம் எனவும், வரவேற்பு நிகழ்ச்சிகளில் வெடி வெடிக்க வேண்டாம்” எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்துக்கு மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் து.சு.மணியன், மாவட்ட தலைவர்கள் கோஸ்டல் இளங்கோ, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சக்தி வெங்கடேஷ் வரவேற்றார்.
இதில் மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், வக்கீல் செல்வம், மாவட்ட துணை தலைவர் சிவராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருள்ராஜேஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.