
தவிர்க்க முடியாத சூழலில் நிலம் கையகப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விடப் பலமடங்கு இழப்பீடு மட்டுமின்றி, அந்தப் பகுதி மக்களுக்குத் திட்டத்தில் பங்கு அல்லது நிரந்தர வாழ்வாதார வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆவேசமாக பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதானி குழுமம் கமுதி பகுதியில் அமைத்துள்ள 648 மெகாவாட் சூரிய மின் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் அதிர்ச்சியளிக்கின்றன. உள்ளூர் மக்களின் கண்ணீரில் உருவான இந்தத் திட்டம், இன்று ஆலங்குளம், மானூர், கந்தர்வக்கோட்டை, ஓட்டப்பிடாரம், நிலக்கோட்டை, சீர்காழி மற்றும் பெருகவாழ்ந்தான் எனத் தமிழகம் முழுவதும் பேராபத்தாய் உருவெடுத்து வருகிறது. இவை மீத்தேன் திட்டங்களை விட மோசமானவையாக இருக்கின்றன. இது வெறும் தனித்தனி சம்பவங்கள் அல்ல. தமிழகத்தின் நிலம், நீர் மற்றும் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்படும் திட்டமிட்டத் தாக்குதல் ஆகும். இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வளர்ச்சி என்பது வாழ்வாதாரத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், விவசாய நிலங்களில் சூரியத் தகடுகள் ஊன்றப்பட்டு உருவாக்கப்படும் மின்சாரம் யாருக்கானது? வயல்வெளிகள் கான்கிரீட் காடுகளாக மாறி, மேய்ச்சல் நிலங்கள் முள்வேலிக்குள் முடங்கி, நீர்நிலைகள் வறண்டு போவதை முன்னேற்றம் என்று ஒப்புக்கொள்ள முடியாது. இது வருங்காலத் தலைமுறைக்கு நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
எனவே தமிழ்நாடு அரசு, விவசாயப் பயன்பாட்டில் உள்ள விளைநிலங்களை, தொழில்துறை சூரிய மின் திட்டங்களுக்காகத் தாரைவார்க்கும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உடனடி இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கமுதி உள்ளிட்டப் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, உயர்நீதிமன்றக் கண்காணிப்பில், ஒரு சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
மக்களின் முழுமையான சம்மதம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடின்றி எந்தவொரு திட்டத்தையும் தொடங்கக் கூடாது என்கிற சட்டப்பூர்வ உத்தரவாதத்தை, அரசு உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். ஆடு, மாடு மேய்க்கும் பொது நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க, ஏற்கனவே உள்ள நிலப் பாதுகாப்புச் சட்டத்தை, இன்னும் சரியான மாற்றங்களோடு வலிமைப்படுத்த வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில் நிலம் கையகப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விடப் பலமடங்கு இழப்பீடு மட்டுமின்றி, அந்தப் பகுதி மக்களுக்குத் திட்டத்தில் பங்கு அல்லது நிரந்தர வாழ்வாதார வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வளர்ச்சி என்பது நிலத்தை அழிப்பதில் இருக்கக் கூடாது. நிலத்தைப் பாதுகாப்பதில் தான் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பன்னாட்டு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பக்கம் நிற்காமல், மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் பக்கம் நின்று அரணாகத் திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.