ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி நீரில் மிதப்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், அதுபோன்று பதற்றமடைய வேண்டாம்
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி நீரில் மிதப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலர் பிளாஸ்டிக் அரிசி என்று கூறி வருகின்றனர். மேலும், அத்தகைய பிளாஸ்டிக் அரிசியை வாங்க வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீரில் மிதக்கும் அத்தகைய அரிசி மணிகள் செறிவூட்டப்பட்டவை. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்த சோகை போன்ற தீவிர பிரச்சனையை எதிர்த்து போராடுகிறது.
இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும். வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன.
இந்த அரிசியை எளிதில் கண்டறியலாம். நிறம் வேறு மாதிரியாக இருக்கும். நீரில் மிதக்கும். இதில் சேர்க்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் காரணமாக அவை எளிதாக நீரில் மூழ்கிவிடாது. எனவே, செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.