பணமதிப்பு நீக்க நடவடிக்கை தான் காரணம்.. குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபரின் உருக்கமான கடிதம்..!

First Published Dec 12, 2017, 5:51 PM IST
Highlights
why killed family business man letter


பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தாலும் கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் தான் குடும்பத்தையே கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயன்றதாக சென்னையில் குடும்பத்தையே கொலை செய்த தொழிலதிபர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மல் பகுதியில் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் தனது தாய் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோசன், மீனாட்சி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 

அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்த தாமோதரன், தாய், மனைவி, குழந்தைகள் ஆகிய 4 பேரையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தாமோதரனும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இன்று காலை வெகுநேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது, தாமோதரனின் தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். ஆனால், தாமோதரனுக்கு மட்டும் உயிரிருந்ததை அடுத்து அவர் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மற்ற 4 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தாமோதரனின் வீட்டில் நடத்திய சோதனையில், அவர் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு தொழில் முடங்கியதாக தாமோதரன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலுக்காகவும் குடும்ப செலவுக்காகவும் கடன் வாங்கியுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால்,  கடனையும் திருப்பிசெலுத்த முடியாமல் குடும்பத்தையும் நடத்த முடியாமலும் தவித்து வந்த தாமோதரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் அதற்கு மற்றவர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற சந்தேகம் வந்ததை அடுத்து நால்வரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், குடும்பத்தையே கொலை செய்துவிட்டு தாமோதரனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாமோதரனுக்கு கடன் தொல்லை இருந்ததாக சந்தேகிக்கும் போலீசார், அவருக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

click me!