போலீசார் சூர்யாவை மிரட்டி 45,000 ரூபாய் கொடுத்து மாற்றிப் பேசவைத்தனர் என சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி சொல்கிறார்.
அம்பை காவல் நிலையத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் சித்ரவதை செய்யப்பட்ட இளைஞர் சூர்யா பிறழ்சாட்சி கூறியதற்கு போலீசார் மிரட்டியதுதான் காரணம் என்று அவரது தாத்தா பூதப்பாண்டி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ், பல்லை பிடுங்கிய டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. அவர் மட்டுமின்றி பல காவல்ரகள் இணைந்து விசாரணை கைதிகளிடம் மோசமான நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்த அவர் ஏஎஸ்பி பதவியில் இருந்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த பெ. அமுதா ஐபிஎஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல்கட்ட விசாரணை முடிந்து இன்று இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி அமுதா ஐபிஎஸ் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
அம்பையில் பல் பிடுங்கிய விவகாரம்: ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, "போலீசார் மிரட்டியதால்தான் என் பேரன் நடந்த உண்மையை மாற்றி, கீழே விழுந்து பற்கள் உடைந்துவிட்டதாகக் கூறினான். இப்படிச் சொல்வதற்காக அவனுக்கு ரூ.45 ஆயிரம் தந்திருக்கிறார்கள்" என்றார்.
மேலும்,"வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் பயந்து போய்தான் சாட்சி சொல்ல வரவில்லை. பல்லை பிடுங்கியது மட்டுமில்லாமல் பிறப்புறுப்பில் மிதித்து சித்ரவதை செய்துள்ளனர். என் பேரன் மருத்துவமனையில் பாதி உயிருடன் கிடக்கிறான். விசாரணை அதிகாரியிடம் நான் அனைத்தையும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
நியாயம் கிடைக்கும் என நம்பவதாகத் தெரிவித்த பூதப்பாண்டி, "தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களை இப்படி எல்லாம் தாக்குவாரா... எனக்கு அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கையே இல்லை" என்றும் வேதனையுடன் கூறினார்.
தன்பாலின திருமணம் பற்றி நாடாளுமன்றம் முடிவெடுக்கும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்