தேனி தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக சார்பாக யார் களம் காண்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தனது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நிறைவு பெறும் என தெரிகிறது.
இந்த நிலையில், தேனி தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக சார்பாக யார் களம் காண்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தொகுதி பங்கீட்டின் படி, மக்களவைத் தேர்தலில் திமுகவே நேரடியாக அந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, தேனி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது. ஆனால், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியடைந்தார்.
undefined
அந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் தேனியை தவிர்த்து மற்ற 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளதால் தமிழ்நாட்டின் 39 புதுச்சேரியின் ஒன்று சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். எனவே, இந்த முறை தேனியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்தன.
அதனை பூர்த்தி செய்யும் வகையில், தேனி திமுக வசமே வந்துள்ளது. தேனியை பொறுத்தவரை தேவர், நாயக்கர், இஸ்லாமிய சமூக வாக்குகள் கணிசமாக உள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தேனி தொகுதி அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிரிவினைக்கு பிறகு சலசலத்து போயுள்ளது. தேனி மக்களவைத் தொகுதிக்குள் வரும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போடிநாயக்கனூர், உசிலம்பட்டி தவிர மற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தேனி மக்களவை தொகுதி 2009ஆம் ஆண்டில் உருவானது. அந்த தேர்தலில் காங்கிரஸின் ஆரூண் ரஷித் வெற்றி பெற்றார். 2014இல் அதிமுகவின் பார்த்திபன், 2019இல் அதிமுகவின் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றனர். இந்த முறை திமுகவுக்கு தேனி தொகுதி வந்துள்ளதால், அக்கட்சி சார்பில் தங்கத் தமிழ்செல்வன் அல்லது பொன்.முத்துராமலிங்கம் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதில், பொன்.முத்துராமலிங்கம் 2014 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலுனுக்கு நெருக்கமானவர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தை சேர்ந்த பொன்.முத்துராமலிங்கம், மதுரையில் வசித்து வருகிறார். ஆனாலும், 2014இல் தேனியில் அவருக்கு திமுக சீட் கொடுத்தது. ஒருகாலத்தில் எம்.ஜிஆரை எதிர்த்து போட்டியிட்டு தேர்தலில் கடுமையாக வேலை பார்த்து அதிமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் பொன்.முத்துராமலிங்கம். ஆனால், அவருக்கு வயது 80க்கு மேல் ஆகி விட்டது என்பதால், தேனி தொகுதியில் தங்கத் தமிழ்செல்வனுக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்து அமமுக சென்று அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு திமுக வாய்ப்பளித்தது. ஆனால், தோல்வியை தழுவினார். அடுத்து மாநிலங்களவை சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனிடையே, கட்சி தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலுக்கு அவருக்கு நெருக்கமானவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். அத்துடன், தங்க தமிழ்ச்செல்வனுக்கு இந்த முறை கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தேனி மண்ணின் மைந்தரான தங்க தமிழ்செல்வனுக்கு அந்த தொகுதியில் கணிசமான செல்வாக்கும் உள்ளது. 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர், வெறும் 6,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார். 2019 தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட்டு 3ஆம் இடம் பிடித்தார். தற்போது தேனியில் கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் காங்கிரஸ், மதிமுக கட்சிகளின் கூட்டணியும் உள்ளது. அதிமுகவில் பிளவும் ஏற்பட்டுள்ளது என்பதால், சீட் கிடைத்தால் தங்கத்துக்கு வெற்றி உறுதி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அதேபோல், அதிமுகவை பொறுத்தவரை தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயண சாமிக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். பாஜக கூட்டணியில் தேனியை ஓபிஎஸ், டிடிவி ஆகிய இருவருமே கேட்பதாக தெரிகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்பு தேனி மக்களவை தொகுதி பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது. அப்போது, 1999இல் அந்த தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்துள்ளார்.எனவே, தேனி தொகுதியில் அவர் நிற்க விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தேனி அல்லது தென் மாவட்டங்களில் நிற்க ஓ.பி.ரவீந்திரநாத் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருவேளை தேனி தொகுதி டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்பட்டால், ஓ.பி.ரவீந்திரநாத் ராமநாதபுரம் தொகுதியில் களம் காண அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.