அடுத்த தலைமை செயலாளர், டிஜிபி யார்? ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்?

By Manikanda PrabuFirst Published Jun 5, 2023, 12:26 PM IST
Highlights

தமிழகத்தின் தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய பொறுப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் யாரை நியமிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

ஒரு மாநிலத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் என்றால் அது தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரான டிஜிபி ஆகிய பொறுப்புகள்தான். இந்த இரண்டு பொறுப்புகளிலும் யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவை திறம்பட இருக்கும். இந்த இரண்டு பொறுப்புகளுக்குமே முதல்வர்கள் தங்களுக்கு நெருக்கமான திறமையான அதிகாரிகளை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிப்பது வழக்கமாக இருக்கிறது.

அந்தவகையில், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே தலைமை செயலாளராக இறையன்புவும், டிஜிபியாக சைலேந்திரபாபுவும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர்கள் இருவருமே அவர்களது பணிக்காலம் முடியும் தருவாயில் உள்ளனர். தமிழகத்தின் இந்த இரண்டு முக்கிய பொறுப்புகளும் ஒரே நேரத்தில் காலியாகவுள்ளதால் இந்த இடங்களை பிடிக்க அதிகாரிகள் மத்தியில் பலத்த போட்டிகள் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில், முருகானந்தம், அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், சிவதாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் தலைமைசெயலாளர் ரேஸில் இருப்பதாகவும், இதில் சிவதாஸ் மீனாவின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல், டிஜிபி ரேஸில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால் ஆகியோரது பெயர்கள் உள்ளதாகவும், இதில் சங்கர் ஜிவால் பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. டிஜிபி பதவியை பொறுத்தவரை தமிழக அரசு தேர்வு செய்து அனுப்பும் பட்டியலை ஆய்வு செய்யும் மத்திய பணியாளர் தேர்வாணையமும், உள்துறை அமைச்சகமும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி 5 அல்லது மத்திய பணியாளர் தேர்வாணைய விதிகளின்படி 3 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசிடம் கொடுக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும்.

முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரையில, இந்த பொறுப்புகளுக்கு தகுதிவாய்ந்த திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எந்த அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் அவரது நேரடி பார்வையில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, ஸ்டாலினின் சாய்ஸ் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் 7ஆம் தேதி ஒன்று கூடும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன்..! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி

தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய பொறுப்புகளுக்கு முன்னனியில் இருக்கும் சிவதாஸ் மீனா, சங்கர் ஜிவால் ஆகிய இருவரும் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். 1989ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சிவதாஸ் மீனா ஐஏஎஸ்சின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட இவர், முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார். சீனியரான இவர், இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட செயல்படக் கூடியவர். ஸ்டாலின் குட்புக்கில் இடம்பெற்றவர் போன்ற விஷயங்கள் ப்ளஸாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், 1990 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால்,  உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, முதல் ஆளாக சென்று ஸ்டாலினை அவரது இல்லத்துக்கு சேரில் சென்று சந்தித்தார். அதன்பிறகு, அவர் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ள சங்கர் ஜிவால், ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்து அண்மையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டார். அப்போதே அடுத்த டிஜிபியாக அவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது அவரது பெயர் டிஜிபி ரேஸில் முன்னனியில் உள்ளது.

இந்த பின்னணியில், தலைமை செயலாளர், டிஜிபி ஆகிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்படும் ஒருவரில் யாராவாது ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, இதில்  ஏதேனும் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.

ஸ்டாலினை பொறுத்தவரை இந்த பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்ற முதற்கட்ட ஆலோசனையை அவர் ஏற்கனவே நடத்தி முடித்து விட்டார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அண்மையில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார். அதற்கு முன்பே இந்த ஆலோசனை நடைபெற்று முடிந்து விட்டதாகவும், இரண்டாம் கட்ட ஆலோசனையில் அவர் ஈடுபடவிருந்தபோது, ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதால் அதில் கவனம் செலுத்த வேண்டி, அந்த ஆலோசனைகளை அவர் தள்ளி போட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரண்டு பதவிகளும் விரைவில் காலியாகவுள்ளதால், விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

click me!