மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். அந்த வகையில் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது. அதே போல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
undefined
யார் இந்த முத்துசாமி?
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள முத்துசாமி தற்போது வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக உள்ளார். ஆனால் இவர் அதிமுகவில் தான் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இவர் 1977, 1980, 1984 தேர்தல்களில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991 தேர்தலில் பவானி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த முத்துசாமி, 1991-ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தார். மேலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் முத்துசாமி இருந்தார். ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களை முத்துசாமி தான் வகுத்து கொடுப்பார்.
பின்னர் 2010ம் ஆண்டு முத்துசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த அவர் 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே போல், 2016 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் 2021 தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முத்துசாமிக்கு வீட்டுவசதி வாரியத்துறை வழங்கப்பட்டது.
இந்த சூழலில் அவருக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை உயர்த்திய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நெஞ்சு வலி காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பு வழங்கும் வகையில் தற்போது முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சார பயணம் மேற்கொள்கிறார் என்றால், அங்கு முத்துசாமியின் பிரமாதமான பயணத் திட்டம் இருக்கும். இதற்கு பாராட்டும் பெற்று இருக்கிறார்).
மேலும் செந்தில் பாலாஜி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் அதே போல், முத்துசாமியும் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் அடையாளமாக கருதப்படும் முத்துசாமி, ஜாதி ரீதியான வலிமையான தலைவராகவும் கருதப்படுகிறார். பெரிய அளவில் எந்த சர்ச்சையிலும் சிக்காத முத்துசாமிக்கு தற்போது ஸ்டாலின் அமைச்சரவையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக வெளியாக உள்ள தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.