விஜய்யை கண் அசைவில் வைத்திருப்பவர்: யார் இந்த புஸ்ஸி ஆனந்த்?

By Manikanda Prabu  |  First Published Feb 10, 2024, 4:33 PM IST

நடிகர் விஜய்யை தன்  கண் அசைவில் வைத்திருக்கும் அவருக்கு நெருக்கமான புஸ்ஸி ஆனந்த் யார் என்பது பற்றி காணலாம்


நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் தலைவராக விஜய் உள்ளார். அவருக்கு அடுத்த பொதுச்செயலாளர் பதவியில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த புஸ்ஸி ஆனந்த் உள்ளார். விஜய் உடனேயே எப்போதும் வலம் வரும் அவரது நம்பிக்கையை பெற்ற புஸ்ஸி ஆனந்த் தொடர்பான தேடல்கள் தற்போது அதிகரித்துள்ளன.

புதுச்சேரியை  சேர்ந்தவர் புஸ்ஸி ஆனந்த். முன்னாள் பிரெஞ்ச் ஆளுநர் புஸ்ஸி என்பவரது நினைவாக புதுச்சேரியில் புஸ்ஸி என்ற தொகுதி உள்ளது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வானதால் புஸ்ஸி ஆனந்த் என இவருக்கு பெயர் வந்தது. புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான அஷ்ரப்பின் உதவியாளரான புஸ்ஸி ஆனந்த், ஆரம்பத்தில் விறகுக்கடை வியாபாரம் செய்து வந்ததாக கூறுகிறார்கள். அதன்பின்னர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் ஆகியவை அவரது தொழில் அடையாளமாக மாறிப்போயுள்ளதாக அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Latest Videos

undefined

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கண்ணன் என்பவர், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்கிற கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சி சார்பாக, புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் புஸ்ஸின் ஆனந்த். இஸ்லாமியர்கள், மீனவர்கள் அதிகமுள்ள அந்த தொகுதியில் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே, அவர்கள் வழியாக அந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த், அந்தப்பகுதி விஜய் ரசிகர் மன்றத்திக்ன் கவுரவத்தலைவராகிறார்.

அதன்பின்னர், எம்.எல்.ஏ.வானதால்,  புதுச்சேரி மாநில விஜய் மன்றத்தின் பொறுப்பு புஸ்ஸி ஆனந்துக்கு கிடைக்கிறது. தொடர்ந்து, தன்னுடைய செயல்பாடுகளால் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உயர்ந்தார் புஸ்ஸி ஆனந்த்.

தொடர்ந்து தோல்வி முகம்: கோட்டை விட்டாரா எடப்பாடி பழனிசாமி?

முன்னதாக, விஜய் ரசிகர் மன்றத்தின் சாதாரண கிளை தலைவராக இருந்து வந்த அவருக்கு, விஜய் ரசிகர் மன்றத் தலைவர் பதவி கொடுத்தவர் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், பின் நாட்களில் எஸ்.ஏ.சிக்கும் புஸ்ஸிக்குமே முட்டிக் கொண்டது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், தனது தந்தைக்கு ஆதரவு தெரிவிக்காமல் புஸ்ஸி ஆனந்த் பக்கம் விஜய் நின்றதுதான். அந்த அளவுக்கு விஜய்க்கு நெருக்கமானவர் புஸ்ஸி ஆனந்த்.

ஆனால், புஸ்ஸி ஆனந்த் மீது சில வில்லங்கமான புகார்கள் உள்ளதாகவும் கூறுகிறார்கள். 2011ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த புஸ்ஸி ஆனந்த், அதன் பிறகே நடிகர் விஜய்யுடன் நெருக்கமானதாக கூறுகிறார்கள். நடிகர் விஜய்யின் சித்தப்பா புதுச்சேரியில் வசித்து வருவதாகவும், அவரை காண விஜய் வரும்போது அவருடன் பழக்கமான புஸ்ஸி ஆனந்த், தற்போது, தனது கண் அசைவின் மூலம் விஜய் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் அளவுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அவரின் நம்பிக்கையை பெற்றுள்ளார். புஸ்ஸி ஆனந்தை தாண்டி யாரும் அவ்வளவு எளிதாக விஜய்யை யாரும் பார்க்க முடியாது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

அரசியலுக்கு முன்னோட்டமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத் தொடங்கப்பட்ட, விலையில்லா விருந்தகம், விலையில்லா மருந்தகம், நடிகர் விஜய் பயிலகம் என அனைத்திலும் புஸ்ஸி ஆனந்தின் பங்கு மிக முக்கியமானது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட 169 இடங்களில் 115 இடங்களில் வென்றதிலும் புஸ்ஸி ஆனந்தின் பங்கு உள்ளது என்கிறார்கள்.

எளிய அணுகுமுறையும், களத்தில் இறங்கி வேலை செய்வதுமே புஸ்ஸி ஆனந்தின் அடையாளம் என கூறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய்யின் வார்த்தையை மீறி அவர் எந்தச் செயலையும் செய்யமாட்டார் என்பதையும் தாண்டி, விஜய்யின் மனவோட்டத்தைப் புரிந்து செயல்படுபவர் எனவும் புகழாரம் சூட்டுகின்றனர்.

புஸ்ஸி ஆனந்த் பாஜக தொடர்பு?


திமுகவை வீழ்த்தவே விஜய்யை பாஜக அரசியல் களத்தில் இறக்கியுள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், பாஜகவே ஜோசப் விஜய்க்கு எதிராக களமாடிய காலமும் உண்டு. அப்படியிருக்க இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், புஸ்ஸி ஆனந்த் மூலமாகத்தான் பாஜக விஜய்யை நெருங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

திமுக கூட்டணியில் 15 மக்களவை தொகுதிகளை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு: கே.எஸ்.அழகிரி தகவல்!

புதுச்சேரியில் உயர் காவல் அதிகாரியாக இருந்த தனது உறவினர் ஒருவர் மூலம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் நெருக்கமானதாக கூறுகிறார்கள். புஸ்ஸி ஆனந்தின் முயற்சியால்தான், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி பலமுறை விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாகவும் கூறுகிறார்கள். புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் மூலம், அமித்ஷாவுக்கு அறிமுகமான புஸ்ஸி ஆனந்த் சேனல் வழியாகவே, விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான பிள்ளையார் சுழியை பாஜக போட்டுள்ளது என இணைய உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.

click me!