சென்னையில் இன்று 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

By vinoth kumar  |  First Published Feb 10, 2024, 3:26 PM IST

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.


சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது விடுமுறை தினங்களில் ரயில் சேவை குறைக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

அந்த வகையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணத்துக்கு காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணிவரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.05 முதல் மாலை 4.30 வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன. 

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மதியம் 11.55. மதியம் 12.45, மதியம் 1.25. மதியம் 1.45 மதியம் 2.20. மதியம் 2.55 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30. காலை 9.40. காலை 10.55, காலை 11.05, காலை 11.30, மதியம் 12, மதியம் 1 ஆகிய நேரங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

click me!