
திருவள்ளூர் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் கோரி, மருத்துவமனையில் பெண்ணின் தந்தையும், கணவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த சிறுவானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33), தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், விடையூரைச் சேர்ந்த தமிழ் இலக்கியா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், மனமுடைந்த இலக்கியா தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை, கடந்த சில தினங்களுக்கு முன் ராஜேஷ் சமாதானம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தமிழ் இலக்கியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ் இலக்கியாவின் சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி, அவருடைய தந்தை முருகேசன் திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் தமிழ் இலக்கியாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகல் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. பின்னர், காவல்துறையினர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க வந்தபோது, ராஜேஷ் தரப்பினரும், தமிழ் இலக்கியாவின் பெற்றோர் ஆகிய இரு தரப்பினரும், தங்களிடம் தான் சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், தந்தை முருகேசனிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, தமிழ் இலக்கியாவின் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.