
மதுரை,
தாதுமணல் எடுக்கும் நிறுவனங்கள் செயல்பட தடைவிதித்த நெல்லை ஆட்சியரின் உத்தரவை இரத்து செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை வருகிற 25–ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன் விளையை சேர்ந்த தாதுமணல் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் எம்.சந்திரேசன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “எங்கள் நிறுவனத்தில் உள்ள மின் மோட்டார்கள் மற்றும் உபகரணங்களுக்கு லைசென்சு பெறவில்லை என்பதால் அவற்றை அக்டோபர் 13–ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று நெல்லை ஆட்சியர் கடந்த மாதம் 4–ஆம் தேதி நோட்டீசு அனுப்பியுள்ளார். ஆனால், எங்களுடைய நிறுவனம் 2009–ஆம் ஆண்டுக்கு முன்பு வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் இருந்து பிரிந்தபோது மின்மோட்டார்களை இயக்குவதற்கான உரிமத்தை எங்களுக்கு கொடுக்கவில்லை. உரிமத்தை சமர்ப்பிக்காததற்கு இதுவே காரணம். எனவே நெல்லை ஆட்சியரின் உத்தரவை இரத்து செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல நெல்லை மாவட்டம் குட்டம் பகுதியில் இயங்கி வரும் மற்றொரு தாதுமணல் நிறுவனத்துக்கு தடை விதித்த ஆட்சியரின் உத்தரவை இரத்து செய்யக்கோரி அந்த நிறுவனத்தின் மேலாளர் எம்.கே.பசித் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.விமலா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி வாதாடினார். அதில், “கடந்த 2013–ஆம் ஆண்டில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் தாதுமணல் கொள்ளை நடைபெறுவது அரசின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடந்தது. முடிவில் அந்த 3 மாவட்டங்களிலும் தாது மணல் எடுப்பதில் முறைகேடு நடப்பது தெரியவந்தது. இதனால் அங்கு தாதுமணல் பிரிக்கும் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தாதுமணல் பிரித்தெடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது மட்டுமல்லாமல், மத்திய அணுசக்தி துறையிடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், அங்கு அனுமதி பெறாமல் இந்த ஆலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் 1999–ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் லைசென்சை புதுப்பிக்கவில்லை. இதன் அடிப்படையில் தான் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டது. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அவர் வாதாடினார்.
இதைத்தொடர்ந்து மனுதாரர்களின் வக்கீல் ஆஜராகி, “அணுசக்தி துறையிடம் இருந்து முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளது. நிறுவனங்களுக்காக பெறப்பட்ட உரிமம் நிரந்தர உரிமம் என்பதால் அதை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்”. என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிறுவனங்கள் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 25–ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.