104 மிமி மழை; மானாவாரி விதைப்பில் இறங்கிய விவசாயிகள்…

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 12:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
104 மிமி மழை; மானாவாரி விதைப்பில் இறங்கிய விவசாயிகள்…

சுருக்கம்

 

பேரையூர்

பேரையூர் பகுதியில் 104 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதையடுத்து மீண்டும் மானாவாரி விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பேரையூர், டி.கல்லுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை, பலத்தமழை பெய்தது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதில் பேரையூரில் மட்டும் 104 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு 63 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதனை நம்பி மானாவாரி விவசாயிகள் இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விதைப்பு செய்திருந்தனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்யாததால் மானாவாரி விவசாயிகள் விதைத்து முளைத்த பருத்தி, மக்காச்சோளம், கம்பு, இரும்பு சோளம், பாசிப்பயறு, குதிரைவாலி, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் வெப்பச்சலனம் தாங்காமல் காய்ந்து கருகிப்போயின. இந்த நிலையில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகள் மனம் தளராமல் மீண்டும் விவசாயத்தில் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் கருகியதால் மீண்டும் அதை அழித்து விட்டு புதிதாக மக்காச்சோளம், பருத்தி, உளுந்து உள்ளிட்ட விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

இதுகுறித்து சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சந்தனம்பிள்ளை, “இந்த மழை தொடர்ந்து பெய்யும் என நம்பிக்கையுடன் மீண்டும் விதைத்து கொண்டிருக்கிறேன். ஏற்கனவே விதைத்த விதைகள் அனைத்தும் வீணாகி போய்விட்டன. இதனால் மீண்டும் மானாவாரி விவசாயமாக அதை அழித்து விட்டு சோளம், பாசிப்பயறு விதைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

மேலும் இந்தபகுதிகளில் அடுத்தடுத்து மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என நெல் நாற்று போட விவசாயிகள் சிலர் நிலத்தை உழவு செய்து வருகின்றனர். இந்த மழையினால் இந்தபகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சி தொடர வேண்டும் என்று விவசாயிகள் வழிபாடுகளையும் நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

குளிருக்கு இடையே சென்னையில் திடீர் மழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுது? வானிலை மையம் வார்னிங்
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?