அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். இவர் திமுக பிரமுகர் என எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகின்றனர். கைதான ஞானசேகரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால், ஞானசேகரன் திமுக பிரமுகர் இல்லை என்று அக்கட்சி தலைமை திட்டவட்டமாக கூறி வருகிறது.
இதனிடையே இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மாணவியின் பெயர், மொபைல் எண், வீட்டு முகவரி போன்றவை இடம்பிடித்திருந்து. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார்.
undefined
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாடு அரசுக்கு எதிராக இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக இனி வேறு வழியில் எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும் இன்று காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நின்று என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து அறுபடை வீடுகளுக்கு சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கோவையில் தனது வீட்டு முன்பு அண்ணாமலை பச்சை நிற வேஷ்டி அணிந்துகொண்டு சாட்டையால் 6 முறை சரமாரியாக அடித்துக்கொண்டார்.
இந்நிலையில் தெருக்களில் சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட, அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது என வன்னி அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மனிதனை மனிதன் கை ரிக்ஷா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றை தடை விதித்தவர் சமத்துவப்பெரியார் கலைஞர் அவர்கள். அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர் அவர்கள்.
இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது. ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை
ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார். தெருக்களில் சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட, அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது.
இப்படி செய்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது கவன ஈர்ப்புக்காக செய்பவர்களாக இருக்க வேண்டும். இதில் பாஜகவும் அண்ணாமலையும் என்ன ரகம் என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.