
திருநெல்வேலி
செங்கோட்டையில், குடியிருப்புப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக்கோரி, முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ.வை மக்கள் முற்றுகையிட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் சாராயக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டதால் செங்கோட்டை – வல்லம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் சாராயக் கடைக்கு அதிகளவில் கூட்டம் வர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் செங்கோட்டை காந்தி சிலை முன்பு உள்ள துணிக்க்கடை திறப்பு விழாவிற்கு முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று வந்திருந்தார்.
பின்னர், அவர் அங்கிருந்து வல்லம் சாலையில் உள்ள ஒரு கோவிலுக்குப் புறப்பட்டார்.
அப்போது, அதே பகுதியில் உள்ள வல்லம் சாலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரி, முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ.வை மக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை இருப்பதால், பெண்கள் குண்டாறு கரையில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், பெண்கள் தனிமையில் செல்ல மிகவும் அச்சப்பட வேண்டிய நிலையும் உருவாகி உள்ளது என மக்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அவர்களிடம், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாக தெரிவித்தார். அதன் பின்னரே மக்கள் எம்.எல்.ஏவை விடுவித்தனர்.