
தாமரைக்குளம்,
அரியலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மும்பையில் நடைபெற்ற செவித்திறன் குறையுடையோருக்கான தேசிய அளவிலான சிறப்பு விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற ஹெலன் கெல்லார் செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகளை ஆட்சியர் பாராட்டி கௌரவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் தலைமை வகித்தார்.
முன்னதாக, மும்பையில் நடைபெற்ற செவித்திறன் குறையுடையோருக்கான தேசிய அளவிலான சிறப்பு விளையாட்டு போட்டியில் உடையார்பாளையம் தாலுகா, கொல்லாபுரம் ஹெலன் கெல்லார் செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவிகள் வெற்றி பெற்றனர்.
சதுரங்க போட்டியில் மாணவர் ரமேஷ் தங்கப்பதக்கம் வென்றார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவர் கருணாகரன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தனிநபர் நடனத்தில் மாணவி பூஜா முதல் பரிசையும், குழு நடனத்தில் முதல் பரிசையும் வென்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் பெற்ற மாணவ - மாணவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 235 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரடியாக கொடுத்தனர்.
செந்துறை வட்டம் வஞ்சினபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கடந்த ஏழு மாதங்களாக தங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் நக்கம்பாடி - பெரும்பாண்டி இடையே ரூ.62 இலட்சத்து 64 ஆயிரம் செலவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றி அகலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடனாக ரூ.49 இலட்சத்து 58 ஆயிரத்துக்கான காசோலைகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மங்கலம், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குனர் சதானந்தம், புதுவாழ்வு திட்ட மேலாளர் முத்துவேல் மற்றும் மாணவ-மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.