
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவிலேயே ஒரு அரசியல் நிகழ்வில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டது இது தான் என்ற மோசமான வரலாற்றைப் படைத்தது. மேலும் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் ஒருநபர் ஆணையமும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 எம்.பி.கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகள் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
ஆணையத்தின் விசாரணை ஒருபுறம் நடைபெறும் நிலையில், இச்சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரியும், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அடுத்த தினமே இதற்கான காசோலையை அக்கட்சியின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். இதனிடையே தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.