
ரயிலில் கத்தி மற்றும் அருவாளுடன் கத்திகொண்டு வந்த மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டவுடன் நாங்கள் பந்தாவுக்காக பண்ணிவிட்டோம். இனி இதுபோன்று செய்யமாட்டொம் என காவல் நிலையத்தில் கதறி அழும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர், நெமிலிச்சேரிக்கு சென்ற புறநகர் ரயிலில், கத்தி, கம்பு, வீச்சரிவாள், பட்டாசுகளுடன் ரயிலில் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி கத்தியவாறே பயணம் செய்த காட்சி வீடியோவாக வைரலாகி வந்தது.
அந்த வீடியோவில், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மாலை நேரத்தில் வீச்சரிவாளுடன் சுற்றித் திரிந்தனர்.
மேலும் ரயிலை விட்டு இறங்கியதும், பச்சையப்பன் கல்லூரியின் மாணவர்களென கோஷமிட்டுக் கொண்டு கத்தியை சுழற்றியபடி குத்தாட்டம் போடுகின்றனர்.
இதுகுறித்த வீடியோ இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் இந்த காட்சிகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது கத்தியை கொண்டு சென்றவர்களில் ஒரு மாணவனை பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அந்த மாணவர் மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், அதே கல்லூரியைச் சேர்ந்த விக்னேஷ், ஜெகதீஸ்வரன், பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 4 மாணவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் 4 பேரும் இனி தவறு செய்யமாட்டோம் தங்களை மன்னித்துவிடுமாறு காவல் நிலையத்தில் கதறி அழுதனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.