
பெரம்பலூர்
மக்கள் மழைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு மேலாண்மை முறைகள் குறித்து விவரமாக விளக்கம் அளித்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் செளமியாசுந்தரி.
மக்கள் மழைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு மேலாண்மை முறைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் செளமியாசுந்தரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி தெரிவித்திருப்பது:
"மழைக் காலங்களில் சுகாதாரமற்ற உணவுகளை உண்பதன் மூலமாகவும், ஐ.எஸ்.ஐ தர முத்திரையற்ற உணவுப் பொருள்களை உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான உடல் உபாதைகள் மக்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே, மக்கள் அனைவரும் குடிநீர் அல்லது குளோரினேஷன் செய்யப்பட்ட மற்றும் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்த வேண்டும்.
ஐ.எஸ்.ஐ தர முத்திரை மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டும்.
உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட சூடான உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை பாதுகாப்பான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும்.
சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி வகைகளை சமைக்கும் முன்பாக உப்பு நீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். கார்போ ஐட்ரேட் நிறைந்த மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப்பொருள்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
மேலும், உலர் திராட்சை, வறுத்த முந்திரி, கடலை வகைகள், பிஸ்கட்டுகள், பால் பொடிகள், ரஸ்க் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். சமைத்த உணவுப்பொருள்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உணவு பொருள்களைத் தயாரிக்கும்போதும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சாலையோரம் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடக்கூடாது.
எளிதில் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய அசைவ உணவுப் பொருள்களை சுத்தமாக கழுவிய, உயர் கொதிநிலை அடைந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
உணவு உபாதைகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டால் ஓ.ஆர்.எஸ் மற்றும் கஞ்சி வகைகளை நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்து இருந்தார்.