
பெரம்பலூர்
ஓகி புயலால் பெரம்பலூர் முழுவதும் பரவலான மழை பெய்ததால் இலாடபுரம் மயிலூற்று அருவியில் நீர் கொட்டத் தொடங்கியுள்ளது, இதனை, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து இரசித்து செல்கின்றனர்.
பெரம்பலுர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது இலாடபுரம் கிராமம்.
இங்குள்ள மயிலூற்று அருவிக்கு அனைத்துத் தரப்பு மக்களும் சென்று குளித்து வருவதோடு, பச்சமலை தொடரின் அழகையும் கண்டு இரசிப்பர். இந்த அருவியில், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிகளவிலான நீர் கொட்டுவது வழக்கம்.
இந்த நிலையில், ஓகி புயலால் பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால், இலாடபுரம் மயிலூற்று அருவியில் கடந்த இரண்டு நாள்களாக நீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த அருவியை இரசிக்கவும், குளித்து மகிழவும் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதேபோல, பெரம்பலூர் அருகேயுள்ள தேனருவி மற்றும் வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி பகுதியில் உள்ள எட்டெருமை பாலி ஆகிய அருவிகளிலும் நீர் கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.