
நீலகிரி
கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததால் கொந்தளித்த மக்கள், சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் லாரியை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், வால்பாறையில் தனியார் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலமாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யப்படுகிறது.
இதில், மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எஸ்டேட் பகுதிகளுக்கு லாரியில் எரிவாயு உருளைகளை எடுத்துச் சென்று விநியோகித்து உடனடியாகப் பணம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட், முதல் டிவிஷன் பகுதியில் வசிப்பவர்களுக்கு எரிவாயு உருளைகள் விநியோகிக்க அப்பகுதிக்கு நேற்று லாரி சென்றுள்ளது.
அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ. 50 தருமாறு கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, உரிய தொகைக்கு ரசீது தரவும் மறுத்துள்ளனர்.
இதனால், சினமடைந்த அப்பகுதி மக்கள் எரிவாயு உருளைகளை வாங்க மறுத்து லாரியைச் சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவலாளர்கள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், எரிவாயு உருளை நிறுவனத்தின் ரசீதுடன் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின்னரே அம்மக்கள் லாரியை விடுவித்தனர்.