
நாமக்கல்
மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் ஆசிரியர்களுக்கும் தனியாக பணி பாதுகாப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ - கிராப் கூட்டமைப்பில் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ - ஜியோ - கிராப்) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் நவலடி தலைமைத் தாங்கினார்.
அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் நல்லுசாமி, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் மலர்க்கண்ணன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ராமு, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் பூபதி வரவேற்றுப் பேசினார். ஜாக்டோ ஜியோ கிராப் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் ஆசிரியர்களுக்கும் தனியாக பணி பாதுகாப்புச் சட்டம் உருவாக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
எட்டாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
ஊதியக்குழு நிலுவைத்தொகையை 1.1.2016 முதல் பணப்பயனாக வழங்க வேண்டும்.
தமிழக அரசு அலுவலர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000-ஆக நிர்ணயிக்க வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.