
சென்னை எக்மோர் ரயில் நிலையம் அருகே எதிரே போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நாட்டுக்குச் செல்ல பணம் இல்லாததால், பந்து ஒன்றை கைகளால் உருட்டி நூதன முறையில் பொது மக்களிடம் பிச்சை எடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், ரஷியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ் என்பவர், காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்தார். செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த அங்குள்ள கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தார்.
அங்கு ஏற்கனவே அழுக்கு படிந்த நிலையில் பிச்சைக்காரர்கள் பலர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பக்தர்கள் காசு போட்டு செல்வதைப் பார்த்த ரஷிய சுற்றுலா பயணி ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ் திடீர் என்று அவர்களுடன் அமர்ந்து துணியை விரித்தார்.
வெள்ளைக்காரரான இவரை மற்ற பிச்சைக்காரர்கள் ஒரு மாதிரியாக பார்த்தனர். அதை அவர் கண்டு கொள்ளவில்லை. கோவிலுக்கு வந்த பக்தர்கள், வெள்ளைக்காரருக்கு என்ன பண நெருக்கடியா என இரக்கப்பட்டு அவருக்கு காசு பணம் போட்டு உதவினர்.
வெளிநாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவை பிச்சை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தி சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தை அணுகுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் சென்னை வந்த ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ் தியாகராய நகரில் சுற்றித்திரிந்து அங்கும் பிச்சை எடுத்தார். ரஷியா-உக்ரைன் இடையே ராணுவ நடவடிக்கை காரணமாக பதட்டம் நிலவுவதால் தொடர்ந்து சென்னையில் தங்கி இருந்து பிச்சை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரகம் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் சென்னை எக்மோர் ரயில் நிலையம் எதிரே வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது பிச்சை எடுத்து வருகிறார்.
போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த அந்த இளைஞர் ஊருக்கு செல்வதற்கு பணம் இல்லாததால் ஒரு பந்தை வைத்து நூதன முறையில் பொது மக்களிடம் பணம் சேகரித்து வருகிறார்.
ரயில் நிலையம் செல்லும் பயணிகள் அந்த இளைஞரை வேடிக்கையாக பார்த்து பிச்சை அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் அங்குள்ள மற்ற பிச்சைக்காரர்கள் போர்ச்சுக்கல் இளைஞரைப் பார்த்து , நமக்கு பொழப்ப கெடுத்திடுவானோ என விநோதமாக பார்த்து வருகின்றனர்.