
கருமலைப்பகுதியில் நடக்கும் ஆய்வுகளுக்கு அச்சம் தெரிவித்த விவசாயிகளுக்கு, “நாடு முழுவதும் என்னென்ன வளங்கள் இருக்கின்றன என்று இந்திய புவி அமைப்பியல் துறாய் ஆய்வு மேற்கொள்கிறது. அதற்கு அச்சப்பட வேண்டாம்” என்று ஆட்சியர் தகவல் அளித்தார்.
வேடசந்தூர் அருகே கருமலைப்பகுதியில், கனிம வளங்களை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி உள்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுடைய கோரிக்கைகள்:
“வேடசந்தூர் அருகே கருமலைப் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில் இந்திய புவி அமைப்பியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
ரெட்டியார்சத்திரம் பகுதி விவசாயிகள் ஒட்டன்சத்திரத்தில் உள்ள வைக்கோல் விற்பனை நிலையத்திற்குச் சென்று வைக்கோல் வாங்கி வருகின்றனர். இது தொலைவாக உள்ளதால் ரெட்டியார்சத்திரத்தில் ஒரு விற்பனை நிலையம் அமைக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து பயிர்க்கடன் பெற்று விவசாயம் செய்து வந்தோம். தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் வருமானம் இல்லாமல் விவசாயிகள் வறுமையில் வாடி வருகிறோம். எனவே, கடனை செலுத்த முடியாமல் உள்ள விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும்.
வறட்சி நிவாரணம் பெறுவதற்கு சில விவசாயிகள் விண்ணப்பிக்காமல் உள்ளனர். எனவே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
குஜிலியம்பாறை அருகே இருக்கும் ஆர்.கோம்பையில் வனத்துறை மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ள நிலையில் அங்கு தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வேறு ஒரு இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி உள்பட பல்வேறு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், கறவை மாடு வாங்குவதற்காக கடன் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்பது போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அளித்த விடைகள்:
“நாடு முழுவதும் என்னென்ன வளங்கள் உள்ளன என்பது குறித்து இந்திய புவி அமைப்பியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கருமலை பகுதியில் ஆய்வு நடந்து வருகிறது. அவர்கள் சில அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைத்து மாதிரிகள் எடுத்து செல்வார்கள். அங்கு கனிம வளங்களை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
ஒரு விவசாயிக்கு வாரம் ஒரு முறை அதிகபட்சமாக 105 கிலோ வைக்கோல் வழங்கப்படும்.
ஆர்.கோம்பை பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கும் இடம் ஆய்வு செய்யப்படும்.
தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.