
ஆதார் எண்ணை, ரேசன் அட்டையுடன் இணைக்காததால் ரத்து செய்த ரேசன் அட்டைகளை திரும்பத் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்ணாடத்தில், மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
ஆதார் எண்ணை ரேசன் அட்டையுடன் இணைக்காததால், பெண்ணாடத்தில் உள்ள 400 ரேசன் அட்டைகளை வருவாய்த் துறையினர் ரத்து செய்தனர். இதனால், சம்பந்தப்பட்ட ரேசன் அட்டைதாரர்கள், ரேசன் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு ஆளாகி பெரும் அவதி அடைந்தனர்.
ரத்து செய்யப்பட்ட ரேசன் அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடினர்.
பின்னர் அவர்கள் “400 ரேசன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும்,
பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்,
தி.அகரம், கோனூர், நந்திமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடக்கிறது என்ற தகவல் அறிந்ததும் திட்டக்குடி தாசில்தார் செல்வியம்மாள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். அதனையேற்றுக் கொண்ட மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் செல்வம், கோவிந்தராஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலைகாசி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வேல்மணி, நகர செயலாளர் கொளஞ்சிநாதன், முன்னாள் கவுன்சிலர் மணிவாசகன், ம.தி.மு.க. நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.