தயக்கம் காட்டும் சசிகலா: திருமண விழாவில் திருப்பம் ஏற்படுவதில் சிக்கல்!

By Manikanda PrabuFirst Published Jun 6, 2023, 11:12 AM IST
Highlights

அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து நிற்கும் நிலையில், அவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக தஞ்சாவூர் திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது

அதிமுகவில் உட்கட்சி பிரச்சினைகளில் தொண்டர்கள் சிக்கி வந்ததற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கட்சி எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்துள்ளது. இதனால், எடப்பாடி தரப்பு உற்சாகத்துடன் பிஸியாக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை களையெடுப்பது, 2024 தேர்தலுக்கு தயாராவது, கூட்டணி பேச்சுவார்த்தைகள் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.

இதனிடையே, சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு மனநிலையில் ஏற்கனவே இருந்த ஓபிஎஸ், சட்டப்போராட்டங்கள் எதுவும் கை கொடுக்காததால், நேரடியாக சென்று டிடிவியை சந்தித்தார். இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். சசிகலாவை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், சசிகலாவை இதுவரை ஓபிஎஸ் சந்திக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதுதான் சசிகலாவின் திட்டம். அதற்கு இதுவரை எடப்பாடி தரப்பு இசைவு தெரிவிக்கவில்லை என்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த முறை எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்று, இந்த முறை சசிகலா அறிவுறுத்தலின் பேரில், ஓபிஎஸ் பக்கம் நிற்கும் வைத்திலிங்கத்தின் மகனது திருமணம் தஞ்சாவூரில் நாளை நடக்கிறது. இந்த திருமணத்திற்கு, ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகிய மூவருக்குமே வைத்திலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். திருமண நிகழ்வில் மூவரையும் ஒன்றிணைத்து திருப்பம் ஏற்படுத்தி விடவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் செல்லும் நிலையில், சசிகலா கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், திருமணம் முடிந்த பின்னர் வைத்திலிங்கத்தின் வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தானை நீக்குங்கள்- திமுக அரசுக்கு எதிராக சீறும் எடப்பாடி பழனிசாமி

ஆனால், சசிகலாவின் இந்த முடிவு வெறும் உடல்நலக்குறைவால் எடுக்கப்பட்டதல்ல; அவரது தயக்கமே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்கு பின்னால் சசிகலாவின் தம்பி திவாகரனின் தலையீடு இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஏற்கனவே, தினகரனுடன் பஞ்சாயத்தில் இருக்கும் திவாகரன், எடப்பாடி பழனிசாமியுடன் நீண்டகாலமாகவே பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் விசாரித்தபோது, திருமண விழாவில் மூவரும் இணைந்து ஒரே மேடையில் தோன்றினால் அது எடப்பாடி தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட தடையாகிவிடும். இதுவே அவரது தயக்கத்துக்கு காரணம் என்கிறார்கள்.

சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே, அதிமுகவில் பிரிந்து நிற்பவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் என்று திட்டவட்டமாக சசிகலா கூறி வருகிறார். தற்போது, ஓபிஎஸ் இறங்கி வந்து விட்டார். டிடிவியும் இறங்கி வந்துவிட்டார். மூவரும் ஒரு பக்கம் நிற்பது அவர்களுக்கு பலம்தானே என்ற கேள்வி எழலாம். 

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “சிறையில் இருந்து வெளியே வந்ததுமே கட்சி முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று சசிகலா நினைத்திருந்தார். அதனால்தான் படோபடமாக தொண்டர்கள் மத்தியில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் ஊர்ந்து வந்தார். ஆனால், இங்கு நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. கட்சி முழுவதும் எடப்பாடி கைக்கு சென்று விட்டத்தை அவர் பின்னரே உணர்ந்திருக்கக் கூடும். அவரை பொறுத்தவரை சின்னமாவாக அதிமுகாவின் ராஜமாதாவாக இருக்க நினைக்கிறார். இந்த சூழலில் பன்னீர், டிடிவியுடன் இணைவது சரியாக இருக்காது. டிடிவி தினகரனுடன் இணைவதை எடப்பாடி தரப்பும், மன்னார்குடி குடும்பமும் விரும்பவில்லை. தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி அடிபட்டாலும், கட்சி எடப்பாடி தரப்பிடமே இருக்கிறது. எனவே, எடப்பாடியுடன் சமரசமாக போவதையே சசிகலா விரும்புவார். அப்போதுதான் கட்சியும், தொண்டர்களும், சின்னம்மா பக்கம் வந்துவிட்டனர் என்ற பிம்பம் உருவாக்கப்படும். அதனைத்தான் சசிகலாவும் விரும்புவார்.” என்கிறார்கள்.

click me!