சென்னை மாநகர காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை, மற்ற அதிகாரிகளோடு ஒத்துழைப்பு இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் கூறப்படுகிறது.
குற்றச்சம்பவமும் திமுகவிற்கு தலைவலியும்
நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியை திமுகவால் கொண்டாடப்பட முடியாத வகையில் அடுத்தடுத்து பல்வேறு குற்ற சம்பவங்கள் திமுக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் 65 பேர் பலி, போதைப்பொருள் விற்பனை, அதிமுக நிர்வாகிகள் வெட்டிக்கொலை. தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என தொடர் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கை காவல் துறை அதிகாரிகள் உரிய முறையில் மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டு வருகிறது.
Commissioner Arun : சென்னை மாநகரக் காவல் ஆணையராக அருண் நியமனம்.! யார் இவர்.? அச்சத்தில் ரவுடிகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை- தடுக்க தவறிய காவல்துறை
இந்த நிலையில் தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிடியாக இடமாற்றம் செய்யப்பட்டு ஏடிஜிபியாக இருந்த அருண் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கியமாக ஆம்ஸ்ட்ராங் கொலையே முன்கூட்டியே தடுக்காததே காரணம் என கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை மிரட்டல் இருப்பது உளவுத்துறைக்கு பல மாதங்களுக்கு முன்பே எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்தும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது காரணமாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்படுகிறார். சம்பவம் நடைபெற்ற இடம் பதட்டமாக உள்ள நிலையில் அந்த பகுதிக்கு ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் சென்று பார்வையிடவில்லையென கூறப்படுகிறது.
மாற்றத்திற்கான காரணம் என்ன.?
மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லையென்றும், மற்ற அதிகாரிகள் சந்தீர் ராய் ரத்தோரின் பேச்சை மதிக்கவில்லையெனவும் தகவல் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் சென்னையில பல இடங்களில் போதைப்பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெறுவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சொல்லப்படுகிறது. மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்காமல் மென்மையான போக்கை கையாண்டதே குற்றவாளிகள் சர்வசாதாரணமாக நடமாட முடிந்ததாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே சென்னை மாநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.