காய்கறி விலை உயர்வால் சாமானிய மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 – 140 வரை விற்பனையாகிறது. தக்காளி மட்டுமல்ல பச்சைமிளகாய், இஞ்சி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பழங்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மளிகை பொருட்களை பொறுத்தவரை துவரம் பருப்பு, பாசி பருப்பு, அரிசி என அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. குறிப்பாக சீரகம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ சீரகத்தின் விலை ரூ.200, ரூ.250 என இருந்த நிலையில் தற்போது கிலோ ரூ.600 முதல் ரூ.650 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மளிகை பொருட்கள் | முந்தைய விலை | தற்போதைய விலை |
துவரம் பருப்பு | ரூ.118 | ரூ.160 |
உளுத்தம் பருப்பு | ரூ.112 | ரூ.124 |
பாசி பருப்பு | ரூ.91 | ரூ.102 |
கடலை பருப்பு | ரூ.61 | ரூ.66 |
சீரகம் | ரூ.300 | ரூ.680 |
மிளகு | ரூ.500 | ரூ.550 |
வெந்தயம் | ரூ.75 | ரூ.84 |
கடுகு | ரூ.70 | ரூ.74 |
புளி | ரூ.110 | ரூ.150 |
பூண்டு | ரூ.80 | ரூ.150 |
காய்ந்த மிளகாய் | ரூ.230 | ரூ.260 |
சுக்கு | ரூ.260 | ரூ.350 |
வேர்க்கடலை | ரூ.110 | ரூ.125 |
இதனிடையே உணவு பாதுகாப்பை அதிகரிக்க, மத்திய மாநில அரசுகள் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு, சாதாரண கிடங்கு அமைக்க 50% முதல் 70% வரை மானியம் வழங்கி வருகின்றனர். இதை பயன்படுத்தி நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் உணவு பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மொத்த வியாபாரிகள் அவ்வப்போது செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துவது வழக்கம் என்றும், இதை தடுத்தால் 15 நாட்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் உணவு தானிய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் போன்றவற்றின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு, தற்போது காய்கறி, மளிகை பொருட்களின் போன்றவற்றின் கடும் விலை உயர்வு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் FIR வெளியானது! தற்கொலைக்கு இதுதான் காரணம்! அதிர்ச்சி தகவல்!