
காஞ்சிபுரம்
கைத்தறி உற்பத்திப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை திரும்பப் வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் இரங்கசாமி குளம் அருகிலிருந்து காமாட்சியம்மன் காலனியில் உள்ள கைத்தறித்துறை அலுவலகம் வரை நெசவாளர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெசவாளர் சங்கத் துணைத் தலைவர் இ.பாண்டியன் தலைமை தாங்கினார். இலட்சுமிபதி, பழனி, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி சம்மேளன பொதுச்செயலர் இ.முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில், “பட்டு நூல் சேலைகள் விற்பனை வரி 5 சதவீதம், ஜரிகைக்கு 12 சதவீதம், கோறாவுக்கு 5 சதவீதம் மற்றும் கைத்தறி உற்பத்திப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும்,
கூட்டுறவு, தனியார் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.
பருவமழைக் காலங்களில், ஈரப்பதத்தினால் இரண்டு மாதங்கள் வேலை பாதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த இரு ஆண்டுகளாக பெருமழை, வர்தா புயலால் நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே, அனைத்து நெசவாளர்கள் குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் பருவமழைக் காலமான நவம்பர் மாதத்தில் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில், நெசவாளர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜீவா, சிப்பந்திகள் சங்கத் தலைவர் வாசுதேவன், கூட்டுறவு ஊழியர் சங்கம், முறைசாரா சங்க பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.