
ஈரோடு
மகனை ஆள்வைத்துக் கொன்ற தந்தை உள்பட இருவருக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதித்து கோபி நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டியன் (30). இவரது தந்தை துரைசாமி (55). இவர்களுக்குள் அடிக்காறு தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த துரைசாமி, மகன் பாண்டியனை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் வருடம் 8-ஆம் மாதம் 26-ஆம் தேதி பண்ணாரி கோயிலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்க பாண்டியன் சென்றபோது, துரைசாமி (55), கோவையைச் சேர்ந்த மகேந்திரன் (30), கள்ளிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (30), பங்களாபுதூரைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஆகிய ஐந்து பேர்களும் சேர்ந்து பாண்டியனைக் கொலை செய்தனராம்.
இதுகுறித்து, சத்தியமங்கலம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து இந்த ஐவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறார்கள் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு நடந்து கொண்டிருந்தபோது மகேந்திரன் என்பவர் இறந்துவிட்டார். இந்த வழக்கு கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மகனைக் கொலை செய்த தந்தை துரைசாமி, செல்வராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.