படகு போட்டியின்போது சுத்தம் செய்வதாக கூறி கொடைக்கானல் ஏரிக்குள் நுழைந்த நகராட்சி ஊழியர்களால் பரபரப்பு…

 
Published : Oct 07, 2017, 07:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
படகு போட்டியின்போது சுத்தம் செய்வதாக கூறி கொடைக்கானல் ஏரிக்குள் நுழைந்த நகராட்சி ஊழியர்களால் பரபரப்பு…

சுருக்கம்

Municipal staff entering Kodaikanal lake claiming to clean up during boat races

திண்டுக்கல்

கொடைக்கானல் ஏரியில் நடந்துக் கொண்டிருந்த படகு போட்டியின்போது ஏரியை சுத்தம் செய்வதாக கூறி நகராட்சி ஊழியர்கள் படகுகளுடன் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியில் மாநில அளவிலான ஸ்கல் விரைவு படகுப் போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற இருந்தது.

நேற்று காலை 7 மணியளவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அமெச்சூர் ரோயிங் அசோசியேசன் பொருளாளர் வெங்கட்ராமன், கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் தலைவர் இராமச்சந்திர துரைராஜா ஆகியோர் கொடியேற்றி போட்டிகளைத் தொடக்கிவைத்தனர்.

மொத்தம் 18 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் ஐந்து போட்டிகள் நடத்தப்பட்டன. அடுத்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் தூய்மை பணியினை மேற்கொள்ளப் போவதாக கூறி நகராட்சி ஊழியர்கள் எட்டு படகுகளுடன் போட்டிகள் நடைபெற்றப் பகுதிக்குள் நுழைந்தனர்.

இதனிடையே போட்டியில் கலந்துகொண்ட கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (36) என்பவர் ஓட்டிய ஸ்கல் படகின் குறுக்கே வந்த நகராட்சி படகு அவரது படகின் மீது மோதியதில் ஈஸ்வரனின் படகு கவிழ்ந்தது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

உடனடியாக அவர் போட் கிளப்பின் விசைப்படகு மூலம் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரவணன், “கொடைக்கானல் ஏரி, நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எந்தவிதமான போட்டிகள் நடத்துவதாக இருந்தாலும் நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

இன்று (அதாவது நேற்று) நடந்த இந்தப் போட்டிகள் நடத்த அனுமதி கோரவில்லை. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏரியினை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக சுகாதார ஊழியர்கள் படகுகள் மூலம் பணியில் ஈடுபட்டனர். இதற்கும் போட்டிகள் நடப்பதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.

அத்துடன் போட்டிகள் நடத்துவதால் நகராட்சி படகு குழாமிற்கு ரூ.23 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படும். அதனைப் போட்டி நடத்துபவர்கள் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து போட்கிளப்பின் தலைவர் இராமச்சந்திர துரைராஜா, “போட்டிகளை நடத்த எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என்றும், கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதனடிப்படையில் கடந்த 2012–ஆம் ஆண்டு இதேபோல ஸ்கல் படகு போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது போட்டிகள் நடத்துவது குறித்தும் ஏற்கனவே நகராட்சிக்கு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பான சமாதான பேச்சுவார்த்தை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. காவல் துணை கண்காணிப்பாளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில், காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் போட்டிகளை நடத்துவது என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது உள்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டிகளை சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடத்த போட் கிளப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!