
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குளம், குட்டை, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சாலைகளிலும், விவசாய நிலங்களிலும் கூட தண்ணீர் தேங்கியது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த இரு நாள்களாக பெய்துவரும் கனமழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் சராசரி மழை அளவான 212 மில்லி மீட்டரைக் காட்டிலும் நடப்பாண்டு கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால், பரவலாக மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், மொத்தமுள்ள நீர்நிலைகளில் 10 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, 20 நாள்களுக்கு மழை நீடித்தால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும்.
பெருந்துறை, சீனாபுரம், துடுப்பதி, விஜயமங்கலத்தில் மிதமான மழை பெய்தது.
காஞ்சிக்கோவில், திங்களூர், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலை, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.
பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையத்தில் 85 மில்லி மீட்டர், பெருந்துறை 12 மில்லி மீட்டர், புங்கம்பாடி 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.