தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாம்… மழை விட்டு விட்டு தான் பெய்யும்… வானிலை மையத்தின் நகைச்சுவை ரிப்போர்ட்!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 2:06 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடிம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி  தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு ஆர்ஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதுக்குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாலர்களிடம் பேசுகையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை கடலூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். நாளை தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்ட புவியரசன், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தீபாவளியன்று மழை விட்டு விட்டு பெய்யும் என்றும் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையொட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 12 செ.மீட்டர் மழையும் காரைக்காலில் 10 செ.மீட்டர் மழையும் திருவாரூர் 8 செ.மீட்டர் மழையும் வேதாரண்யத்தில் 7 செ.மீட்டர் மழையும் தக்கலையில் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய கடலோர பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும் மன்னார்வளைகுடா பகுதிகளில் வரும் 30, 31 தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்த்தார். 

click me!