
விருதுநகர்
திருச்சுழியில் குடியிருப்புப் பகுதியில் சாராயக் கடை திறக்க மாட்டோம் என்று உறுதியளித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வேடநத்தம் சாலையில் உள்ளது கல்லுமடம்.
இங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த மக்கள், சாராயக் கடை அமைக்க திட்டமிடப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.அன்புச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்த தகவலறிந்து காவலாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சுவார்த்தையில், “கல்லுமடம் குடியிருப்பு பகுதியில் சாராயக் கடை திறக்க மாட்டோம்” என உறுதியளித்தனர்.
அந்த உறுதியையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.