
தருமபுரி
தருமபுரியில் மின்மோட்டார் பழுதானதால் செயலிழந்த குடிநீர் தொட்டியை வெற்றுக் குடங்களுடன் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியபோது, போராட்டம் நடத்தினால்தான் பழுதான மின்மோட்டாரை சரிசெய்வீர்களா? என்று கேள்வி கேட்டனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் வாரச்சந்தை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், மக்கள் அதிகளளவில் வந்து செல்வர்.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வாரச் சந்தைக்கு வருபவர்கள் என அனைவரின் பயன்பாட்டிற்காகவும் இங்கு குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து குடிநீரை வழங்க மின் மோட்டாரும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மோட்டார் பழுதடைந்ததால் இந்த டேங்க்கில் உள்ள குடிநீரை குழாய்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்கள் வரை செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வெற்றுக் குடங்களுடன் குடிநீர்த் தொட்டியை முற்றுகையிட்டனர்.
“மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தினால்தான் பழுதான மின்மோட்டாரை சரிசெய்வீர்களா? என்று கேள்வியும் கேட்டனர்.
இதனால் அந்தப் பகுதியை பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதுகுறித்த தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உறுதியளித்தனர்.