முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அதிமுக நீதிமன்றத்தை நாடும் என அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்
சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம், அதிமுக வழக்கறிஞர் பிரிவினர், தங்களது கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்கும் நோக்கோடு செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவை அளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, “தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதனடிப்படையில், ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ளது. இந்நிலையில், அதிமுக பாஜக இடையே திரைமறைவில் ஒப்பந்தம் நடக்கிறது என்று தனியார் (தினமலர்) செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள அவதூறு செய்தி கண்டிக்கத்தக்கது. உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கவில்லை. தண்டனையையும், குற்றவாளி என்று வழங்கப்பட்ட தீர்ப்பையும் நிறுத்திதான் வைத்துள்ளது. எனவே, திமுக அரசு பொன்முடிக்கு பதிவப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவது ஏற்புடையது அல்ல. அவ்வாறு, ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தால் அது சட்ட ரீதியாக தவறு. பொன்முடிக்கு ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தால் அந்த விவகாரம் தொடர்பாக அதிமுக நீதிமன்றத்தை நாடும்.” என்றார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு: துரை வைகோவுக்கு வாய்ப்பு!
புகழேந்தி அதிமுக உறுப்பினர் அல்ல என இன்பதுரை, “ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஒன்றாக இருக்கும்போது அவர் நீக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் இரட்டை இலை தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தவறு. அவர் எந்த கேள்வியும் எங்களை கேட்க முடியாது. அவர், மனு கொடுக்க தகுதி இருக்கிறதா என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.” என்றார்.
தேர்தல் பத்திரம் தொடர்பாக பேசிய இன்பதுரை, திமுக வாங்கிய நிதி எவ்வளவு என்று எண்ணி பார்க்க வேண்டும். தங்களுடைய கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துவிட்டு மற்றவர்களை குறை சொல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக திமுக இயற்றிய சட்டமே வலுவற்றது என குற்றம்சாட்டினார்.